Friday, 1 April 2011

குரு தட்சிணாமூர்த்தி - 5


ஒரு நாள் சுவாமிகளுடன் பள்ளியில் பயின்று வந்த சிறுவன் ஒர்வனை விடம் தீண்டியதால் மூர்ச்சையானான். மணி, மந்திரம் ஆகிய அநேக பரிகாரங்கள் செய்தும் பயன் இல்லை. வெளியூர் சென்று இருந்த அப்பையனின் அன்னை மறுநாள் வீடு வந்து தன அருமை மைந்தன் பிணமாய்க் கிடப்பதைப் பார்த்து, ச்வாமிகளிடத்து வந்து "உன்னுடன் பள்ளியில் பயின்ற சுந்தரமாகிய ஒரு பிள்ளையையும் பாம்புக்கு இரையாகக் கொடுத்துவிட்டு நான் எப்படி உயிர் வாழ்வேன். அவன் பிழைத்து எழாவிடில் நானும் என் உயிரை உன் முன்னிலையில் விட்டு விடுகிறேன்" என்று தரையில் விழுந்து புரண்டு அலறினாள்.  இப்பரிதாப நிலையை கண்ட சுவாமிகள், "அம்மா! உன் மைந்தனை எழுப்பித் தருகிறேன்.  கவலை நீங்கி வருவாயாக" என்று பிரம்பை எடுத்து "அப்பா! சுந்தரம் எழுந்திரு" என்று சொல்லி சிறுவன் தலையில் ஓர் அடி அடித்தார்.  உடனே சுந்தரம் தூங்கி எழுபவன் போல் உயிர் பெற்று எழுந்தான்.

இங்ஙனம் பல அற்புதங்களை செய்துவரும் நாளில், அவருடைய பிதாவாகிய சிவசிதம்பரம் பிள்ளை சுவாமிகள் முன்பாக நின்று "ஸ்வாமின்! எனது பாரியை மீனாம்பிகை பிரேதமாய் கிடக்க யான் பாராதிருக்கும் வரம் தரல் வேண்டும்" என்றும் "சுவாமிகளின் திருகரத்தாலேயே எனக்கு ஈமக்கடன்கள் முடிக்க வேண்டும்" என்றும் ப்ரார்த்திதுக்கொண்டார். இதனை கேட்ட மீனாம்பிகை "சுமங்கலியாகவே தான் சரீரத்தை விட வேண்டும் என்றும் தனக்கும் சுவாமிகளின் திருகரத்தாலேயே ஈமக்கடன்கள் செய்ய வேண்டும் " என்றும் கேட்டு கொண்டனள். ஒரு நாள் சுவாமிகள் தாய் தந்தையரை அருகில் அழைத்து "இன்னும் எட்டாவது நாள் காலையில் நமது கருமம் முடிந்துவிடும்.  நீங்கள் சிவநாமத்தை உச்சரித்துக் கொண்டு சிவத்தியானம் செய்து வாருங்கள்" என்று அருளினார். இதை கேட்ட பெற்றோர்கள் இருவரும் சுவாமிகள் திருக்குறிப்பை உணராமல் மிக்க வியாகூலத்துடன் சுவாமிகள் இன்னும் எட்டு திங்கங்களில் சமாதி அடைந்து விடுவார் என்று நினைத்து உற்றார் உறவினர்களிடம் தெரிவித்து சுவாமிகள் அருளியபடி சிவத் த்யானம் செய்து கொண்டிருந்தனர். எதிர் பார்த்த எட்டாவது தினமும் விடிந்தது. இன்று தினம் சுவாமிகள் சமாதி அடைய விரும்புவதாக அறிந்த உறவினர்கள் வந்து நிறைந்தனர். மாதா, பிதாக்கள் இருவரும் தூய சிந்தனையுடன் சுவாமிகளின் முன்னர் அமர்ந்து சிவநாமத்தை உச்சரித்துக் கொண்டு சமாதி தருணத்தை எதிர் நோக்கியிருக்கும் பொழுது, சுவாமிகள் இருக்கை விட்டு எழுந்து மாதா, பிதா இருவர் நெற்றியிலும் திருநீறிட்டு அனுக்க்ரகம் purinthaar. சிறிது நேரத்தில் இருவரும் மூர்ச்சியாடைந்து கணப்பொழுதில் சிவபதம் அடைந்தனர். கூடி இருந்த உறவினர்கள் சுவாமிகளின் திருகுறிப்பின் உண்மையை உணர்ந்து சிவசிதம்பரம் பிள்ளைக்கும், மீனாம்பிகை அம்மைக்கும் செய்ய வேண்டிய இறுதிக் கிரியைகளை முறைப்படி செய்து மயானத்துக்கு எடுத்துச் சென்று இருவருக்கும் ஒரே தானத்தில் சிதை அடுக்குத் தீ இடுவதர்க்குத் தயார் செய்தனர்.  சுவாமிகள் விதிப்படி வந்து ஸ்நானம் செய்து கொள்ளி  எடுத்துக் கொண்டு சுற்றி வந்து தலைப்பக்கத்தில் வைத்துவிட்டுத் தமது பெற்றோர் கடன் தீர்ந்தது என்று, கட்டிய வஸ்திரத்தோடு திரும்பி பாராமல் எவரும் அறியா வண்ணம் புறப்பட்டுத் தேசங்கள் தோறும் சஞ்சரிக்க தொடங்கினார்.

வைதீஸ்வரன் கோயிலுக்கு வந்தபோது ஒரு நாள் சுவாமிகளின் உறவினரான கோயில் கணக்கர் சுவாமிகளைக் கண்டு சுவாமிகளின் மகிமை அறியாது, "தம்பி! நான் பத்துத் தினங்கள் மருந்து சாப்பிட வேண்டி இருக்கிறது.  அது வரை நீ இங்கிருந்து கணக்கு எழுதி வருகிறாயா?" என்று வினவ, ஸ்வாமிகள் "சிவ கைங்கர்யம் தானே, செய்கிறேன்" என்றார்.

கணக்கு ஊழையும்  எழுத்தாணியையும் சுவாமிகள் கணக்கரிடமிருந்து பெற்றுக்கொண்டு கணக்கு மேடையில் அமர்ந்து, மணியக்காரர் முதலானோர் வந்து விவரம் சொல்வதற்கு முன்னதாகவே எழுத வேண்டியவை அனைத்தையும் எழுதி முடித்துக் கணக்கைக் கட்டி வைத்து விட்டு நிட்டையில் அமர்ந்துவிடுவார்.  மணியக்காரர் ஆகியோர் வந்து கணக்கு விவரம் சொல்லும் பொது "யாவும் எழுதி ஆயிற்று; கணக்கை பார்த்துக் கொள்ளுங்கள்" என உத்தரவாகும்.  அவர்கள் கணக்கை எடுத்து பார்க்கும் பொழுது எல்லாம் சரிவர எழுதி இருக்கும்.  ஒரு நாள் கோவில் திட்டத்தில் நான்கு படி பாலும் ஒரு படி தேனும் கணக்கு எழுதப்படாமல் இருந்ததைக் கண்டு மணியக்காரர் சுவாமிகளிடம் கேட்க, "குருக்கள் பாலையும் தேனையும் அபிஷேகம் செய்யாமல் வீட்டுக்கு கொண்டு செல்ல வைத்திருக்கிறார்.  போய் பாருங்கள்" என்றார்.  மணியக்காரர் கோவிலுக்குள் சென்று சுவாமிகள் குறித்த இடத்தில் பார்வையிட, பாலும் தேனும் தனியாக எடுத்து வைக்கப்பட்டிருந்தன.  இவ்விதமாக சுவாமிகள் எழுதி வந்த கணக்கு காரணமாக, தயிர், பால், அரிசி,  எண்ணை ஆகியனவும், உண்டியல் பணம், முடிப்பணம் ஆகியனவும் களவு செய்ய இடமில்லாடதாயிற்று.

கோயில் சிப்பந்திகளும், சுவாமிகளைக் காணும் பொது அச்சத்துடன் எழுந்து நின்று வணக்கம் செய்பவர்களாயினர்.  தான் கணக்கு எழுதி வருவது காரணமாக கோவில் சிப்பந்திகள் தம்மிடம் அச்சங் கொண்டு மரியாதைக் காட்டி வருவதை உணர்ந்து சுவாமிகள் அவ்வூரை விட்டு தென் திசை நோக்கிப் புறப்பட்டுப் பல ஊர்களிலும் சஞ்சரித்துக் கொண்டு அதி வீரராமன் பட்டினத்தை அடைந்தார்.

Tuesday, 22 March 2011

குரு தட்சிணாமூர்த்தி - 4

அவ்வேளையில், அங்கமெல்லாம் விபூதி அணிந்தவரும் இலங்கோடு கௌபீனம் தரித்தவருமான சிறு பிராயமுள்ள துறவி ஒருவர் தொட்டிலில் கிடந்த பாலகனைத் தூக்கிக்கொண்டு வெளியில் ஓடி வந்து கூட்டத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்ற பெண்ணிடம் கொடுத்துவிட்டுக் கூட்டத்தில் கலந்து மறைந்தார்.  பின்னர் வந்து சேர்ந்த அய்யங்கார் தம்பதிகள் வீடு பூட்டியபடியே இருக்க சுற்றிலும் நெருப்பினால் சூழப்பட்டிருப்பதையும் கண்டு குழந்தையின் கதி என்ன ஆயிற்றோ என்று அலறி அடித்துக் கொண்டு தெருவில் விழுந்து புரண்டு அழுதனர்.  குழந்தையை கையில் வைத்திருந்த பெண் ஓடி வந்து "இதோ உங்கள் குழந்தை சுகமாயிருக்கின்றது; வருந்தாதீர்கள்" என்று மாதாவிடம் கொடுத்தாள்.  குழந்தையை வாங்கி உச்சி முகர்ந்து "வீடு பூட்டியபடி வெந்து கொண்டிருக்கிறதே; குழந்தையை எவர், எவ்வாறு வெளியிற் கொண்டு வந்தார்?" என்று வினவ, அந்த பெண் ஒரு இளம் பரதேசி வந்து தன்னிடம் குழந்தையை கொடுத்துவிட்டு சென்றதை கூறினாள்.  யாருக்கும் வந்து போனது யார் என்று தெரியவில்லை.


வீடு தீ பிடித்ததை முன்னரே உரைத்ததும், குழந்தை நலமாக உள்ளது என்று சொன்னதும் நினைவுக்கு வர; வந்து காப்பாற்றி போனது சுவாமிகள் தான் என்று அறிந்து, சுவாமிகளின் அருளால் பிறந்த குழந்தைக்கு, சுவாமிகளின் பெயர் தான் சூட்ட வேண்டும் என தீர்மானித்து, மறுநாள் காலை, சுவாமிகள் முன் அந்த குழந்தையை கிடைத்த, அதற்கு "அருணாச்சலம்" என்று பெயர் சூட்டினர்.

இதை அறிந்த உறவினர், ஆசாரியர் முதலானோர் தங்கள் சமயத்திற்கு உரியதல்லாத இந்நாமத்தை விட்டு தங்கள் வைணவ சமய சம்பந்தமான பெயரையே சூட்ட வேண்டும் என திடமாக கூறியும், அந்த தம்பதியினர் அதற்கு சம்மதிக்கவில்லை.  உறவினரும், சுற்றத்தாரும், இதை எதிர்த்து "உங்கள் குழந்தைக்கு நமது வைணவ சம்பிரதாயத்திற்கு புறம்பான நாமகரணம் சூட்டியதை மாற்றாவிடில் உங்கள் இருவரையும் சாதிக்குப் புறம்பு படுத்துவோம்". என்றனர்.  பெற்றோர்கள் சுவாமிகளின் அனுக்ராஹத்தினாலேயே தாங்கள் புத்திர பாக்கியம் பெற்றதும், மீண்டும் சுவாமிகளின் அருள் கருணையால் குழந்தை நெருப்பிலிருந்து காப்பாற்ற  பெற்றதும் எடுத்து சொல்லி தங்கள் சுவாமிகளின் முன்னிலையிலேயே சூட்டிய நாமத்தை தாங்களே மாற்றுவது இயலாது.  "எனது பெயரை மாற்றி இன்ன பெயரால் அழையுங்கள்" என்று அக்குழந்தையின் மூலம் திருவருள் உத்தரவானால் அப்படியே செய்கிறோம் என்று கூறினார்.  அவ்வண்ணம் சபையோர் முன்பாகக் குழந்தையை கூட்டி வந்தனர்.  "தம்பி உன் பெயர் என்ன?" என்று சபையோர் கேட்க "என் பெயர் அருணாசலம்" என்றனன், மழலை மாறாத அந்த சிறுவன்.

"உனது பெற்றோர் உனக்கு நமது மரபுக்குப் புறம்பான, வசநிக்கதகாத நாமத்தை சூட்டயுள்ளனர்.  அதை மாற்றி வெங்கடாச்சலம் என்ற நாமம் சூட்ட நாங்கள் விரும்புகிறோம்.  அதை நீ ஏற்று கொள்ளவாயா?" என்று சபையோர் உரைத்தனர்.

உடனே அறியாப்பருவதினனாகிய பாலகன் ஆவேசம் அடைந்து எழும்பிக்  குதித்துச் சபையில் உள்ளவர்களை உக்கிரமாகப் பார்த்து "அருணாச்சலம் என்னும் நாமத்தில் உள்ள அகரம், "அரி" நாமத்தின் முதல் அட்சரமாகும்.  ரகர உகரம் திரு என்னும் பிராட்டியின் நாமத்தில் உள்ள ஈற்று அட்சரமாகும்.  ணகர ஆகாரம் நாராயண மூர்த்தியின் அஷ்டாக்ஷரமாகிய மந்திரத்தில் உள்ளதாகும்.  அசலம் என்பது நீங்கள் சூட்ட விரும்பும் வெங்கடாசலம் என்னும் பெருமான் வீற்றிருக்கும் தானமாகும்.  இதை மறைந்து அருணாசலம் என்னும் திருநாமம் வசநிக்கதகாது என்றது அறியாமையே ஆகும்.  இனியேனும் உமது வாயை மூடுங்கள், பேத புத்தியை விடுங்கள், அல்லவிடிர் கெடுவீர்கள்" என்று சொல்லி மௌனமாக இருந்தான்.  இந்நிகழ்ச்சியை கண்ட சபயோர்கள் மெய் நடுங்கி பயம் அடைந்து ஒவ்வொருவராக எழுந்து சென்றனர்.  அது முதல் அவர்களும் தங்கள் வைணவ சம்பிரதாயத்தைப் போற்றியும், பிற சமயத்தில் துவேஷங்களை காட்டாமலும் ஸ்வாமிகளிடத்து மிக்க அன்பு பாராட்டி வந்தனர்.

Friday, 18 March 2011

குரு தட்சிணாமூர்த்தி - 3

ஆசிரியர் உடனே எழுந்து, வீட்டுக்குச் செல்லும் வழியில், அவரை அழைப்பதற்காக வீட்டிலிருந்து வேலையாள் விரைந்து வந்தான்.  ஆசிரியர் அவனிடம் விஷயங்களை விவரமாக அறிந்து வேட்டுக்குச் சென்று காலம் தாழ்த்தாமல் குழந்தைக்கு வேண்டிய சிகிச்சைகளைச் செய்து முடித்து பள்ளிக்கு வந்து சுவாமிகள் முன்பாக வணக்கமுடன் நின்று "சகலமும் உணர்ந்த சர்வக்ஞ்சராகிய சுவாமிகள் பள்ளியில் வந்து படிக்க வேண்டிய காரணம் யாது உளது? ஏன் பள்ளிக்கு வர வேண்டும்?" என வினவ, சுவாமிகள் "சும்மா வந்து போகிறேன்.  நீங்கள் நிற்கவேண்டாம் அமருங்கள்!" என கூறினார்.  என்றாலும் ஆசிரியர், சுவாமிக்கு முன் ஆசனத்தில் அமராமல், பூமியிலே உட்கார்ந்தார்.  சுவாமிகள் பள்ளிக்கு எழுந்தருளும் காலத்தில் ஆசிரியர் எழுந்து நின்று மரியாதை செய்வதும், இருக்கும் படி உத்தரவு கிடைத்த பிறகே உட்காருவதும் வழக்கமாகி விட்டதைக் கண்ட சுவாமிகள் பள்ளிக்கு வருவதை நிறுத்திவிட்டார்.  உலக வாழ்க்கை அனுசரித்து பள்ளிக்குச் சென்று வந்தது மூன்று மாத காலமேயாகும்.

தம்பி நமச்சிவாயமும் ஒரு வருடம் வரை பள்ளியில் பயின்ற பின்னர், வீட்டிலேயே இருந்து தந்தை சிவசிதம்பரம் பிள்ளையினுடைய சிவ பூஜைக்கு வேண்டிய உபகரணங்களைச்  சேகரித்துக் கொடுத்தான்.  ஒருநாள் சுவாமிகள் நமச்சிவாயத்தைப் பார்த்து "நீ பிள்ளையார் கோவில் நந்தவனத்திருக்குச் செல்லும் வேலையில் அங்கு தேங்காய் மாங்காய் கீழே விழுந்து கிடந்தால் எடாதே.  எடுத்தால் சிவபராதி ஆவாய்" என்றார்.

நமச்சிவாயம் சிறுவனாய் இருந்தபடியால் ஒருநாள் நந்தவனம் சென்ற காலத்தில் அங்கு தரையில் கிடந்த தெங்கின் நெற்றை கண்டு அவா மிகுதியால் மூத்தோர் வார்த்தையை மறந்து அதனை எடுத்து உரித்து உடைத்துத் தின்றுவிட்டு பின் வழக்கம் போல் பத்திர புஷ்பங்களைச் சேகரித்து கொண்டு இல்லம் சேர்ந்தனன்.  இந்நிகழ்ச்சியை தாமாகவே உணர்ந்து கொண்ட சுவாமிகள் "அப்பா நமச்சிவாயம்! இன்று நந்தவனத்தில் நீ செய்த அபராதம் கங்கா ஸ்நானம் செய்து விச்வேச்வரரையும் தரிசித்தால் அன்றி நிவர்த்தியாகாது" என்று அருளி "இனிமேல் நீ பூஜைக்கு பத்திர புஷ்பம் எடுக்க வேண்டாம், அய்யா எடுத்து கொள்வார்" என கட்டளை இட்டார்.

அது முதல் நமச்சிவாயம் மிகவும் வியாகூலம் அடைந்து சில நாட்கள் சென்றதும் யாரிடத்தும் அறிவிக்காமல் காசி யாத்திரை சென்று விட்டான்.  தாயும் தந்தையும் சிறுவன் நமச்சிவாயத்தைக் காணாது, தெரிந்த இடங்களுக்கெல்லாம் ஆள் அனுப்பித் தேடியும் ஒரு தகவலும் கிடைக்காமால், சுவாமிகள் முன் சென்று கவலையோடு விவரமாக விண்ணப்பித்து கொண்டனர்.  சுவாமிகள் புன்னகை செய்து "நீவிர் மூர் பிறவிகளில் பெற்றெடுத்த பிள்ளைகள் எல்லாம் இப்பொழுது உங்களை பிரிந்து இருக்கிறார்களே, அவர்களைப்பற்றி நீங்கள் கவலைப்படவில்லையே! சிறுவன் நமச்சிவாயத்தைப் பற்றி மாத்திரம் கவலை கொள்வது ஏனோ? தம்பி நமச்சிவாயம் இப்போது காசி யாத்திரை சென்று கொண்டிருக்கிறான்; நீங்கள் அழைக்கினும் வாரான்.  அவன் இனி  மேல் க்ராகாஸ்ரமத்தை விரும்பவும் மாட்டான்; அதனால் நீங்கள் நன்மையே அடைவீர்கள்; நமச்சிவாயத்தைப் பற்றி கவலை நீங்கி இருங்கள்" என்று திருவாய் மலர்ந்து அருளினார்.

நமச்சிவாயம் காசியம்பதியை அடைந்து தினமும் தவறாமல் புனித கங்கையில் நீராடி விஸ்வேஸ்வர, விசாலாக்ஷி, அன்னபூரணி ஆகிய மூர்த்திகளைத் தரிசனம் செய்து கொண்டு சில காலம் அங்கு தங்கி இருந்தான்.  பின்னர் தென் தசை நோக்கிப் பிரயாணமாகி, காஞ்சி, சிதம்பரம், திருசென்காட்டங்க்குடி சேர்ந்தான்.  அவ்விடத்தில் வருகை புரிந்த அடியார் ஒருவரைக் கண்டு அவருடன் சேர்ந்து புறப்பட்டு, கீழ்வேளூர் என்னும் திருப்பதிக்கு அருகில் உள்ள நீலப்பாடி என்னும் ஊரை சென்றடைந்தான்.  அவ்வூரில் கல்வி, அறிவு, ஒழுக்கங்களில் சிறந்தவரும், அபேத சாக்ஷாத்க்கார ஞானம் பெற்றவருமான மகான் ஒருவரை அணுகித் தொண்டு செய்து, விதிப்படி அவர்பால் சன்யாசம் பெற்று ஞான சாஸ்த்திர விசாரம் செய்து வந்தனன்.

கீழலாத்தூரை அடுத்த ஒரு ஊரில் ஆரவாமுத ஐயங்கார் என்பவர் தமக்கு ஐம்பது வயதாகியும் புத்திர பாக்கியம் இல்லாமல் மனக்லேசம் அடைந்தவராய், தன பத்நியுடன், திருவரங்கம் சென்று காவிரியில் ஸ்நானம் செய்து அரங்கநாதனை தரிசித்துக் கொண்டு சில காலம் வசித்து வந்தனர்.  ஒருநாள் அரங்கப்பெருமான் அவர்கள் கனவில் தோன்றி "உங்கள் ஊருக்கு பக்கம் உள்ள கீழாலத்தூரில் ஞானசித்தன் ஒருவன் அவதரித்திருக்கிறான்.  அவனுக்கு நீங்கள் இருவரும் மனம் நிறைந்த அன்புடன் ஒரு பசுவை குளுப்பாட்டி, பரிசுத்தமான இடத்தில் பசுவை மேய்த்து, சுத்தமான பாத்திரத்தில் பால் கறந்து, மதுரமாகக் காய்ச்சித் தினந்தோறும் கொடுத்து வருவீர்களாயின், அச்சித்தன் அதனை அருந்தி ஒருநாள் அப்பாலில் சிறிது சேடமாக வைப்பான்; அதை எடுத்து வந்து பயபக்தியுடன் நீங்கள் இருவரும் உட்கொண்டால், அதன் மேல் புத்திர சந்தானம் பெறுவீர்கள்" எனக் கூறினார்.  இருவரும் உடனே கீழலாத்தூர் சென்று இறைவன் ஆணை படி சுவாமிகளுக்கு தினமும் பால் கொடுத்துக் கொண்டு வந்தனர்.  ஆறாவது தினத்தில் சுவாமிகள் பாலில் சிறிது மட்டும் உட்கொண்டு பாக்கியை வைத்து விட்டு "இனிமேல் பால் கொண்டு வரவேண்டாம்" என கூறினார்.  ஸ்வாமிகள் உச்சிஷ்டமாக வைத்துவிட்ட பாலைத் தம்பதிகள் இருவரும் எடுத்து அமுதமெனப் பருகினர்.  அது முதல் ஆரவாமுத பெரியவரின் மனைவி கர்ப்பம் தரித்து, ஒரு பாலகனை பெற்றெடுத்தாள்.  சுவாமிகளின் அருள் கடாச்சத்தை நினைத்து தம்பதிகள் இருவரும் அடிக்கடி குழந்தையுடன் சென்று சுவாமிகளைத் தரிசித்து வருவார்.  ஒருநாள் குழந்தை தொட்டிலில் அயர்ந்து நித்திரை செய்தபடியால், நித்திரைக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்ற மனத்தராய், குழந்தையை தொட்டிலில் விட்டுத் தாங்கள் மாத்திரம் சுவாமிகளைத் தரிசிக்க வந்தனர்.  ஸ்வாமிகள் பெற்றோரை பார்த்து "உங்கள் வீட்டில் நெருப்பு பற்றிக்கொண்டது.  குழந்தை தொட்டிலில் தூங்குகிறதே! ஓடுங்கள்! ஓடுங்கள்! பயம் வேண்டாம், குழந்தை சுகமாக இருக்கிறது" என்று அருளியது.

ஓடி சென்ற பெற்றோர், வீடு தீ பற்றி எரிவதையும், ஊர் ஜனங்கள் வீடு பூட்டி இருந்ததால், உள்ளே செல்ல முடியாமல், நெருப்பை அணைக்க முடியாமல் திணறலுடன், அணைக்க முயற்சி செய்வதையும் கண்டனர்!

Tuesday, 15 March 2011

குரு தட்சிணாமூர்த்தி - 2


சிவயோகியாரின் வரவால் வருத்தம் நீக்கி, சிவ சிதம்பரம் பிள்ளை சிவயோகியாரின் முன் சென்று நமஸ்கரித்து கைகட்டி நின்று "ஸ்வாமின்! ஸ்ரீ அண்ணாமலைப் பெருமானின் அனுக்ரகத்தால் தோன்றிய அடியேனுடைய அருமைப் பாலகன் ஒருவன் ஐந்து வயதாகியும் வாய் திறந்து பேசாமல் ஊமையாகவே இருக்கிறான்.  அக்குழந்தை மாத பிதா மனம் குளிர மழலைச் சொல் வழங்கும்படி அனுக்ரகம் செய்ய வேண்டும்" என்று பிரார்த்தித்தார்.

துறவியாக வந்த பெருமான் "அந்த அற்புத குழந்தையை நாம் பார்ப்போம்" என்று கூற, சிவ சிதம்பரம் பிள்ளை யோகியாரை வீட்டுக்குள் அழைத்து சென்று தம் தவப்புதல்வனை காட்டினார். அந்த நேரத்தில், அக்குழந்தை பத்மாசனம்  போட்டு, கண்களை மூடி நிஷ்டையில் இருக்க கண்ட சிவ யோகியர், சிவ சிதம்பரம் பிள்ளையை நோக்கி, "இக்குழந்தை பெற்றோர்களாகிய உங்களையும், உங்கள் குலத்தார்களையும், உலகத்தில் உள்ள பக்த ஜனங்களையும் நற்கதியில் சேர்க்கும் பொருட்டு உங்களுக்கு பிள்ளையாக தோன்றி இருக்கிறான். இவன் ஊமை அல்லன். இப்பொழுது நீவிர் உம் பாலகனோடு பேசு" என்றவுடன், சிவ சிதம்பரம் பிள்ளை

"அப்பா குழந்தை! ஏன் கண்களை மூடிக் கொண்டிருக்கிறாய்?" என வினவ

அதற்கு அந்த திரு புதல்வன் "சும்மா இருக்கின்றேன்" என விடை இறுத்தான்.

துறவி "சும்மா இருக்கின்ற நீ யார்?" என்று வினவ

தனது நிலை கலையாது " நீயே நான்.  நானே நீ!" என பதில் இருத்தது.

"சத்தியம்! சத்தியம்!" என்று கூறி துறவி விடை பெற்றார். வந்தது தாம் வணங்கும் "திருஅண்ணாமலையார்" என்று குறிப்பால் உணர்ந்து போற்றி வந்தனர்.

ஒரு நாள் சிவ சிதம்பரம் பிள்ளை தன் மனையாளிடத்தில் "யான் திரிசிரபுரம் சென்று தாயுமானவரை தரிசித்து வருகிறேன். அதுவரை குழந்தைகளை பத்திரமாக பார்த்துகொள்க" என்று சொல்லியபடி விலக,

"அய்யா! தங்களை பார்க்க இரு உறவினர்கள் இன்னும் பத்து நாழிகைக்குள் வருவார்கள்" என்றனன்.

குறிப்பறிந்து, சிவ சிதம்பரம் பிள்ளை, தன் பயணத்தை நிறுத்திகொண்டார்.  உறவினரும் குறித்தபடி வந்தனர்.

இவ்வாறு எல்லா விஷயங்களையும் முன் கூட்டியே அந்த குழந்தை சொல்லி வந்ததால், பெற்றோர்கள் எக்காரியமும், தம் தவப்புதல்வனிடம் தெரிவித்து, அவர் உத்தரவுப்படியே நடந்து வருவாயினர்.

ஒரு சமயம் தில்லைத்தலம் சென்று ஆருத்ர தரிசனம் காண விரும்பிய சிவசிதம்பரம் பிள்ளை, சுவாமிகளை அணுகி விடை தரல் வேண்டும் எனக் கோரினார்.

அதற்கு "நாளை இருபது நாழிகை அளவில் உமது மாதா தேகவியோகம் அடைகின்றாள்" என அருளிற்று.

"என் மாதா எந்த வித நோயும் இன்றி சரீர சவுக்கியத்துடன் இருக்கின்றாளே! எந்த நிமித்தத்தால் தேக வியோகம் அடைவாள்?" என்று பிள்ளை வினவ

"புரை ஏறி விக்கல் உதயமாவதால்" என்றார் சுவாமிகள்.

சுவாமிகளின் திரு வாக்கின் படியே மறுநாள் சிவசிதம்பரம் பிள்ளையின் மாதா தேகவியோகம் (சமாதி) ஆயினள்.

நமசியாயம் என்னும் இளைய மைந்தரைப் பள்ளிக்கு வைக்கும் பருவம் வந்தது.  அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்ய, சுவாமிகள் தகப்பனாரை அழைத்து " நம்மை ஏன் பள்ளிக்கு வைக்கவில்லை?" என்று வினவினர்.

"சகலமும் தெரிந்த சர்வக்னஜர் ஆகிய சுவாமிகளையும் பள்ளிக்கு வைக்க வேண்டுமோ?  வேண்டுமாயின் அதன்படியே ஏற்பாடு செய்கிறேன்" என்று சொல்லி அதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

சுவாமிகள், பள்ளிக்கு சென்று வந்தாலும் , எதிலும், மற்ற குழந்தைகளுடன் விளையாட போகாமல், வேறு ஒன்றையும் நினைக்காமல்,   சுவடியை கையில் ஏந்தியபடி பார்த்து கொண்டிருப்பார்.  சில நேரம், சுவடியை கட்டி முன்பாக வைத்து விட்டு, கண்ணை மூடி நிஷ்டையில் அமர்ந்திருப்பார்.  ஆசிரியர் "தம்பி கண்ணை மூடி கொண்டிருக்கிறாயே! படிக்க வேண்டாமா?" என்று வினவ "படித்தாயிற்று!" என்று பதில் சொல்வார்.  "படித்ததை சொல் கேட்ப்போம்" என்றிட, சுவாமிகள் சுவடியை பாராமல், பிழையின்றி ஒப்புவிப்பார்.  மிகவும்  சந்தோஷம் அடைந்த ஆசிரியர் இன்னொரு சுவடியை கொடுக்க, அதை உற்று பார்த்துவிட்டு நிஷ்டையில் அமர்ந்துவிடுவார்.  "புதிய பாடம் படித்தாயிற்றா?" என்று ஆசிரியர் கேட்க "ஆயிற்று" என்று பதில் வரும். 

ஒரு நாள் சுவாமிகள் ஆசிரியரை நோக்கி "அய்யா! உங்கள் குழந்தை வீட்டுத் திண்ணையிலிருந்து கீழே விழுந்ததால் கை ஒடிந்து விட்டது.  போய் பார்த்து வாருங்கள்" என்று கூறினார்.

Saturday, 12 March 2011

குரு தட்சிணாமூர்த்தி - 1

மகான்கள் வாழ்க்கையில் ஊடுருவி சென்று அவர்கள் வாழ்ந்த விதத்தை மறுபடியும் நம் மனக்கண் முன் காண்பதும், அவர்கள் அருளிய, எளிய, ஆனால் மிகப்பெரிய உபதேசங்களை உணர்ந்து, நம் வாழ்வில் நடைமுறை படுத்தி, அதில் இன்புறுவது என்பது, ஒரு சிலருக்கே அமைகிறது.  ஒரு மகானின் வாழ்கையை படிக்க நேரும் போது பல சக்தி நிறைந்த புண்ணிய தலங்களையும் நாம் அறிய நேரும்.  என்றேனும் அந்த இடங்களுக்கு செல்லும் போது படித்து உணர்ந்தது நம் மனதில் நின்றால், பூரிப்புடன் இருந்துவிட்டு வரலாம்.  சமீபத்தில் குரு தக்ஷிணாமூர்த்தியின் அவதாரத்தில் நடந்த சில விஷயங்களை படிக்க நேர்ந்தது.  அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைத்து > இந்த தொடர்!

தமிழகத்தின் வடகிழக்கு பகுதியில் கீழாலத்தூர் என்னும் பெயர் கொண்ட சிற்றூரில் வேளாளர் மரபில், கல்வி, அறிவு, ஒழுக்கங்களில், பக்தியில் சிறப்புற்ற சிவசிதம்பரம் பிள்ளை என்பவர், தன் மனைவி மீனாம்பிகை அம்மையாருடன் ஒன்றுபட்ட கருத்துடன் இல்லற தர்மத்தை நடத்தி வந்தார்.

இருவரும் சிறந்த சிவ பக்தர்கள்.  நீண்ட காலம் அவர்களுக்கு சந்ததி இல்லாமல் இருந்தது.  இம்மை மறுமை பயன்களை அளிக்கத்தக்க நன் மகப்பேற்றை வேண்டி, பல நோன்புகள் இயற்றியும், புண்ணிய ஷேத்திர யாத்திரை, தீர்த்த ஸ்நானம், ஸ்தல வாசம், மூர்த்திகள் தரிசனம், பெரியோர் சேவை முதலியன செய்து வரும் நாளில், நானிலம் போற்றும் திருவண்ணாமலை எனும் ஷேத்ரத்தை அடைந்தனர்.  அத்தலத்தில் சில நாட்கள் வாசம் செய்து அங்குள்ள தீர்த்தங்களில் மூழ்கியும், கிரி பிரதட்சிணம் வந்தும் மகப்பேறும் விரும்பிய மனத்தினராய் இருந்து வந்தனர்.

ஒரு நாள் இரவு அண்ணாமலை பெருமான் இருவர் கனவிலும் ஒரு அடியவர் உருவில் தோன்றி "மகப்பேறு இல்லாத உங்கள் மனக்குறையை நாமே வந்து நீக்குவோம்.  நீவீர் நும் ஊரைச் சேருங்கள்" என அருளினார்.

உறக்கம் கலைந்து எழுந்த இருவரும் தாம் கண்ட கனவை கலந்து பேசி, மறு நாள் காலையில் ஆலயம் சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்து விடை பெற்றனர்.

ஊருக்கு சென்ற பத்தாவது நாளில் மீனாம்பிகை கருவுற, பத்தாவது மாதம் ஒரு ஆண் மகவு பிறந்தது.  சிவ சிதம்பரம் பிள்ளை குழந்தைக்கு ஜாதக கன்மங்களை முறையாகச் செய்து ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் அருளால் தோன்றிய மகவு என்பதால் "அருணாசலம்" என்று அந்த குழந்தைக்கு பெயர் சூட்டினார்.

பொக்கிஷத்தை பாதுகாப்பதுபோல் அந்த குழந்தையை வளர்த்து வர, இரண்டாவது வருடத்தில் மீனாம்பிகை அம்மையார் மீண்டும் கர்பமுற்று மற்றொரு புத்திரனை பெற்றார்.  அப்புத்திரனுக்கு "நமச்சிவாயம்" என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தனர்.

மூத்த மகனான அருணாசலம், பசித்து அழுவது, ஏதேனும் கண்டு அலறுவது, எதனை கண்டாவது சிரிப்பது போன்றவை இல்லாமல், பாயில், தொட்டிலில் கிடத்தினால் சில வேளை கண்களை திறந்தும், பல நேரம் கண்களை மூடியும் இருப்பான். எதையும் உற்று பாராமலும், மௌனமாகவும், சயநித்திருப்பான்.  மாதா மடியிருத்தி மார்புக் காம்பை வாயில் வைத்தால் சுவைத்து பால் குடிப்பதும், குப்புற விழுந்து, எழுந்து நடக்கும் காலங்களிலும், சில சமயங்களில் பத்மாசனம் போட்டும் கண் மூடி நிஷ்டையில் இருப்பான்.  பேரமைதியும், மௌனமும் அவன் சொத்து.

அருணாச்சலேஸ்வரர் அருளால் பிறந்த குழந்தை, ஐந்து வயதாகியும் வாய் திறந்து பேசாமல் இருந்ததில், பெற்றோர்கள் மிகுந்த மனக்குறை பட்டு இதுவும் நம் தவகுறைவோ என்று நினைத்து, அருணாச்சலேஸ்வரரை த்யானித்து இருந்தனர்.

அருணாச்சலேஸ்வரர், இவர்கள் மனக்குறை தீர்க்கும் பொருட்டு, சடாமுடியும், துவராடையும், விபுதி, ருட்ராக்ஷமும் தரித்து, புனித துறவி வேடம் பூண்டு சிவ சிதம்பரம் பிள்ளை வீட்டை அடைந்தார்.