அவ்வேளையில், அங்கமெல்லாம் விபூதி அணிந்தவரும் இலங்கோடு கௌபீனம் தரித்தவருமான சிறு பிராயமுள்ள துறவி ஒருவர் தொட்டிலில் கிடந்த பாலகனைத் தூக்கிக்கொண்டு வெளியில் ஓடி வந்து கூட்டத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்ற பெண்ணிடம் கொடுத்துவிட்டுக் கூட்டத்தில் கலந்து மறைந்தார். பின்னர் வந்து சேர்ந்த அய்யங்கார் தம்பதிகள் வீடு பூட்டியபடியே இருக்க சுற்றிலும் நெருப்பினால் சூழப்பட்டிருப்பதையும் கண்டு குழந்தையின் கதி என்ன ஆயிற்றோ என்று அலறி அடித்துக் கொண்டு தெருவில் விழுந்து புரண்டு அழுதனர். குழந்தையை கையில் வைத்திருந்த பெண் ஓடி வந்து "இதோ உங்கள் குழந்தை சுகமாயிருக்கின்றது; வருந்தாதீர்கள்" என்று மாதாவிடம் கொடுத்தாள். குழந்தையை வாங்கி உச்சி முகர்ந்து "வீடு பூட்டியபடி வெந்து கொண்டிருக்கிறதே; குழந்தையை எவர், எவ்வாறு வெளியிற் கொண்டு வந்தார்?" என்று வினவ, அந்த பெண் ஒரு இளம் பரதேசி வந்து தன்னிடம் குழந்தையை கொடுத்துவிட்டு சென்றதை கூறினாள். யாருக்கும் வந்து போனது யார் என்று தெரியவில்லை.
வீடு தீ பிடித்ததை முன்னரே உரைத்ததும், குழந்தை நலமாக உள்ளது என்று சொன்னதும் நினைவுக்கு வர; வந்து காப்பாற்றி போனது சுவாமிகள் தான் என்று அறிந்து, சுவாமிகளின் அருளால் பிறந்த குழந்தைக்கு, சுவாமிகளின் பெயர் தான் சூட்ட வேண்டும் என தீர்மானித்து, மறுநாள் காலை, சுவாமிகள் முன் அந்த குழந்தையை கிடைத்த, அதற்கு "அருணாச்சலம்" என்று பெயர் சூட்டினர்.
இதை அறிந்த உறவினர், ஆசாரியர் முதலானோர் தங்கள் சமயத்திற்கு உரியதல்லாத இந்நாமத்தை விட்டு தங்கள் வைணவ சமய சம்பந்தமான பெயரையே சூட்ட வேண்டும் என திடமாக கூறியும், அந்த தம்பதியினர் அதற்கு சம்மதிக்கவில்லை. உறவினரும், சுற்றத்தாரும், இதை எதிர்த்து "உங்கள் குழந்தைக்கு நமது வைணவ சம்பிரதாயத்திற்கு புறம்பான நாமகரணம் சூட்டியதை மாற்றாவிடில் உங்கள் இருவரையும் சாதிக்குப் புறம்பு படுத்துவோம்". என்றனர். பெற்றோர்கள் சுவாமிகளின் அனுக்ராஹத்தினாலேயே தாங்கள் புத்திர பாக்கியம் பெற்றதும், மீண்டும் சுவாமிகளின் அருள் கருணையால் குழந்தை நெருப்பிலிருந்து காப்பாற்ற பெற்றதும் எடுத்து சொல்லி தங்கள் சுவாமிகளின் முன்னிலையிலேயே சூட்டிய நாமத்தை தாங்களே மாற்றுவது இயலாது. "எனது பெயரை மாற்றி இன்ன பெயரால் அழையுங்கள்" என்று அக்குழந்தையின் மூலம் திருவருள் உத்தரவானால் அப்படியே செய்கிறோம் என்று கூறினார். அவ்வண்ணம் சபையோர் முன்பாகக் குழந்தையை கூட்டி வந்தனர். "தம்பி உன் பெயர் என்ன?" என்று சபையோர் கேட்க "என் பெயர் அருணாசலம்" என்றனன், மழலை மாறாத அந்த சிறுவன்.
"உனது பெற்றோர் உனக்கு நமது மரபுக்குப் புறம்பான, வசநிக்கதகாத நாமத்தை சூட்டயுள்ளனர். அதை மாற்றி வெங்கடாச்சலம் என்ற நாமம் சூட்ட நாங்கள் விரும்புகிறோம். அதை நீ ஏற்று கொள்ளவாயா?" என்று சபையோர் உரைத்தனர்.
உடனே அறியாப்பருவதினனாகிய பாலகன் ஆவேசம் அடைந்து எழும்பிக் குதித்துச் சபையில் உள்ளவர்களை உக்கிரமாகப் பார்த்து "அருணாச்சலம் என்னும் நாமத்தில் உள்ள அகரம், "அரி" நாமத்தின் முதல் அட்சரமாகும். ரகர உகரம் திரு என்னும் பிராட்டியின் நாமத்தில் உள்ள ஈற்று அட்சரமாகும். ணகர ஆகாரம் நாராயண மூர்த்தியின் அஷ்டாக்ஷரமாகிய மந்திரத்தில் உள்ளதாகும். அசலம் என்பது நீங்கள் சூட்ட விரும்பும் வெங்கடாசலம் என்னும் பெருமான் வீற்றிருக்கும் தானமாகும். இதை மறைந்து அருணாசலம் என்னும் திருநாமம் வசநிக்கதகாது என்றது அறியாமையே ஆகும். இனியேனும் உமது வாயை மூடுங்கள், பேத புத்தியை விடுங்கள், அல்லவிடிர் கெடுவீர்கள்" என்று சொல்லி மௌனமாக இருந்தான். இந்நிகழ்ச்சியை கண்ட சபயோர்கள் மெய் நடுங்கி பயம் அடைந்து ஒவ்வொருவராக எழுந்து சென்றனர். அது முதல் அவர்களும் தங்கள் வைணவ சம்பிரதாயத்தைப் போற்றியும், பிற சமயத்தில் துவேஷங்களை காட்டாமலும் ஸ்வாமிகளிடத்து மிக்க அன்பு பாராட்டி வந்தனர்.
No comments:
Post a Comment