Friday, 18 March 2011

குரு தட்சிணாமூர்த்தி - 3

ஆசிரியர் உடனே எழுந்து, வீட்டுக்குச் செல்லும் வழியில், அவரை அழைப்பதற்காக வீட்டிலிருந்து வேலையாள் விரைந்து வந்தான்.  ஆசிரியர் அவனிடம் விஷயங்களை விவரமாக அறிந்து வேட்டுக்குச் சென்று காலம் தாழ்த்தாமல் குழந்தைக்கு வேண்டிய சிகிச்சைகளைச் செய்து முடித்து பள்ளிக்கு வந்து சுவாமிகள் முன்பாக வணக்கமுடன் நின்று "சகலமும் உணர்ந்த சர்வக்ஞ்சராகிய சுவாமிகள் பள்ளியில் வந்து படிக்க வேண்டிய காரணம் யாது உளது? ஏன் பள்ளிக்கு வர வேண்டும்?" என வினவ, சுவாமிகள் "சும்மா வந்து போகிறேன்.  நீங்கள் நிற்கவேண்டாம் அமருங்கள்!" என கூறினார்.  என்றாலும் ஆசிரியர், சுவாமிக்கு முன் ஆசனத்தில் அமராமல், பூமியிலே உட்கார்ந்தார்.  சுவாமிகள் பள்ளிக்கு எழுந்தருளும் காலத்தில் ஆசிரியர் எழுந்து நின்று மரியாதை செய்வதும், இருக்கும் படி உத்தரவு கிடைத்த பிறகே உட்காருவதும் வழக்கமாகி விட்டதைக் கண்ட சுவாமிகள் பள்ளிக்கு வருவதை நிறுத்திவிட்டார்.  உலக வாழ்க்கை அனுசரித்து பள்ளிக்குச் சென்று வந்தது மூன்று மாத காலமேயாகும்.

தம்பி நமச்சிவாயமும் ஒரு வருடம் வரை பள்ளியில் பயின்ற பின்னர், வீட்டிலேயே இருந்து தந்தை சிவசிதம்பரம் பிள்ளையினுடைய சிவ பூஜைக்கு வேண்டிய உபகரணங்களைச்  சேகரித்துக் கொடுத்தான்.  ஒருநாள் சுவாமிகள் நமச்சிவாயத்தைப் பார்த்து "நீ பிள்ளையார் கோவில் நந்தவனத்திருக்குச் செல்லும் வேலையில் அங்கு தேங்காய் மாங்காய் கீழே விழுந்து கிடந்தால் எடாதே.  எடுத்தால் சிவபராதி ஆவாய்" என்றார்.

நமச்சிவாயம் சிறுவனாய் இருந்தபடியால் ஒருநாள் நந்தவனம் சென்ற காலத்தில் அங்கு தரையில் கிடந்த தெங்கின் நெற்றை கண்டு அவா மிகுதியால் மூத்தோர் வார்த்தையை மறந்து அதனை எடுத்து உரித்து உடைத்துத் தின்றுவிட்டு பின் வழக்கம் போல் பத்திர புஷ்பங்களைச் சேகரித்து கொண்டு இல்லம் சேர்ந்தனன்.  இந்நிகழ்ச்சியை தாமாகவே உணர்ந்து கொண்ட சுவாமிகள் "அப்பா நமச்சிவாயம்! இன்று நந்தவனத்தில் நீ செய்த அபராதம் கங்கா ஸ்நானம் செய்து விச்வேச்வரரையும் தரிசித்தால் அன்றி நிவர்த்தியாகாது" என்று அருளி "இனிமேல் நீ பூஜைக்கு பத்திர புஷ்பம் எடுக்க வேண்டாம், அய்யா எடுத்து கொள்வார்" என கட்டளை இட்டார்.

அது முதல் நமச்சிவாயம் மிகவும் வியாகூலம் அடைந்து சில நாட்கள் சென்றதும் யாரிடத்தும் அறிவிக்காமல் காசி யாத்திரை சென்று விட்டான்.  தாயும் தந்தையும் சிறுவன் நமச்சிவாயத்தைக் காணாது, தெரிந்த இடங்களுக்கெல்லாம் ஆள் அனுப்பித் தேடியும் ஒரு தகவலும் கிடைக்காமால், சுவாமிகள் முன் சென்று கவலையோடு விவரமாக விண்ணப்பித்து கொண்டனர்.  சுவாமிகள் புன்னகை செய்து "நீவிர் மூர் பிறவிகளில் பெற்றெடுத்த பிள்ளைகள் எல்லாம் இப்பொழுது உங்களை பிரிந்து இருக்கிறார்களே, அவர்களைப்பற்றி நீங்கள் கவலைப்படவில்லையே! சிறுவன் நமச்சிவாயத்தைப் பற்றி மாத்திரம் கவலை கொள்வது ஏனோ? தம்பி நமச்சிவாயம் இப்போது காசி யாத்திரை சென்று கொண்டிருக்கிறான்; நீங்கள் அழைக்கினும் வாரான்.  அவன் இனி  மேல் க்ராகாஸ்ரமத்தை விரும்பவும் மாட்டான்; அதனால் நீங்கள் நன்மையே அடைவீர்கள்; நமச்சிவாயத்தைப் பற்றி கவலை நீங்கி இருங்கள்" என்று திருவாய் மலர்ந்து அருளினார்.

நமச்சிவாயம் காசியம்பதியை அடைந்து தினமும் தவறாமல் புனித கங்கையில் நீராடி விஸ்வேஸ்வர, விசாலாக்ஷி, அன்னபூரணி ஆகிய மூர்த்திகளைத் தரிசனம் செய்து கொண்டு சில காலம் அங்கு தங்கி இருந்தான்.  பின்னர் தென் தசை நோக்கிப் பிரயாணமாகி, காஞ்சி, சிதம்பரம், திருசென்காட்டங்க்குடி சேர்ந்தான்.  அவ்விடத்தில் வருகை புரிந்த அடியார் ஒருவரைக் கண்டு அவருடன் சேர்ந்து புறப்பட்டு, கீழ்வேளூர் என்னும் திருப்பதிக்கு அருகில் உள்ள நீலப்பாடி என்னும் ஊரை சென்றடைந்தான்.  அவ்வூரில் கல்வி, அறிவு, ஒழுக்கங்களில் சிறந்தவரும், அபேத சாக்ஷாத்க்கார ஞானம் பெற்றவருமான மகான் ஒருவரை அணுகித் தொண்டு செய்து, விதிப்படி அவர்பால் சன்யாசம் பெற்று ஞான சாஸ்த்திர விசாரம் செய்து வந்தனன்.

கீழலாத்தூரை அடுத்த ஒரு ஊரில் ஆரவாமுத ஐயங்கார் என்பவர் தமக்கு ஐம்பது வயதாகியும் புத்திர பாக்கியம் இல்லாமல் மனக்லேசம் அடைந்தவராய், தன பத்நியுடன், திருவரங்கம் சென்று காவிரியில் ஸ்நானம் செய்து அரங்கநாதனை தரிசித்துக் கொண்டு சில காலம் வசித்து வந்தனர்.  ஒருநாள் அரங்கப்பெருமான் அவர்கள் கனவில் தோன்றி "உங்கள் ஊருக்கு பக்கம் உள்ள கீழாலத்தூரில் ஞானசித்தன் ஒருவன் அவதரித்திருக்கிறான்.  அவனுக்கு நீங்கள் இருவரும் மனம் நிறைந்த அன்புடன் ஒரு பசுவை குளுப்பாட்டி, பரிசுத்தமான இடத்தில் பசுவை மேய்த்து, சுத்தமான பாத்திரத்தில் பால் கறந்து, மதுரமாகக் காய்ச்சித் தினந்தோறும் கொடுத்து வருவீர்களாயின், அச்சித்தன் அதனை அருந்தி ஒருநாள் அப்பாலில் சிறிது சேடமாக வைப்பான்; அதை எடுத்து வந்து பயபக்தியுடன் நீங்கள் இருவரும் உட்கொண்டால், அதன் மேல் புத்திர சந்தானம் பெறுவீர்கள்" எனக் கூறினார்.  இருவரும் உடனே கீழலாத்தூர் சென்று இறைவன் ஆணை படி சுவாமிகளுக்கு தினமும் பால் கொடுத்துக் கொண்டு வந்தனர்.  ஆறாவது தினத்தில் சுவாமிகள் பாலில் சிறிது மட்டும் உட்கொண்டு பாக்கியை வைத்து விட்டு "இனிமேல் பால் கொண்டு வரவேண்டாம்" என கூறினார்.  ஸ்வாமிகள் உச்சிஷ்டமாக வைத்துவிட்ட பாலைத் தம்பதிகள் இருவரும் எடுத்து அமுதமெனப் பருகினர்.  அது முதல் ஆரவாமுத பெரியவரின் மனைவி கர்ப்பம் தரித்து, ஒரு பாலகனை பெற்றெடுத்தாள்.  சுவாமிகளின் அருள் கடாச்சத்தை நினைத்து தம்பதிகள் இருவரும் அடிக்கடி குழந்தையுடன் சென்று சுவாமிகளைத் தரிசித்து வருவார்.  ஒருநாள் குழந்தை தொட்டிலில் அயர்ந்து நித்திரை செய்தபடியால், நித்திரைக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்ற மனத்தராய், குழந்தையை தொட்டிலில் விட்டுத் தாங்கள் மாத்திரம் சுவாமிகளைத் தரிசிக்க வந்தனர்.  ஸ்வாமிகள் பெற்றோரை பார்த்து "உங்கள் வீட்டில் நெருப்பு பற்றிக்கொண்டது.  குழந்தை தொட்டிலில் தூங்குகிறதே! ஓடுங்கள்! ஓடுங்கள்! பயம் வேண்டாம், குழந்தை சுகமாக இருக்கிறது" என்று அருளியது.

ஓடி சென்ற பெற்றோர், வீடு தீ பற்றி எரிவதையும், ஊர் ஜனங்கள் வீடு பூட்டி இருந்ததால், உள்ளே செல்ல முடியாமல், நெருப்பை அணைக்க முடியாமல் திணறலுடன், அணைக்க முயற்சி செய்வதையும் கண்டனர்!

No comments:

Post a Comment