Friday, 1 April 2011

குரு தட்சிணாமூர்த்தி - 5


ஒரு நாள் சுவாமிகளுடன் பள்ளியில் பயின்று வந்த சிறுவன் ஒர்வனை விடம் தீண்டியதால் மூர்ச்சையானான். மணி, மந்திரம் ஆகிய அநேக பரிகாரங்கள் செய்தும் பயன் இல்லை. வெளியூர் சென்று இருந்த அப்பையனின் அன்னை மறுநாள் வீடு வந்து தன அருமை மைந்தன் பிணமாய்க் கிடப்பதைப் பார்த்து, ச்வாமிகளிடத்து வந்து "உன்னுடன் பள்ளியில் பயின்ற சுந்தரமாகிய ஒரு பிள்ளையையும் பாம்புக்கு இரையாகக் கொடுத்துவிட்டு நான் எப்படி உயிர் வாழ்வேன். அவன் பிழைத்து எழாவிடில் நானும் என் உயிரை உன் முன்னிலையில் விட்டு விடுகிறேன்" என்று தரையில் விழுந்து புரண்டு அலறினாள்.  இப்பரிதாப நிலையை கண்ட சுவாமிகள், "அம்மா! உன் மைந்தனை எழுப்பித் தருகிறேன்.  கவலை நீங்கி வருவாயாக" என்று பிரம்பை எடுத்து "அப்பா! சுந்தரம் எழுந்திரு" என்று சொல்லி சிறுவன் தலையில் ஓர் அடி அடித்தார்.  உடனே சுந்தரம் தூங்கி எழுபவன் போல் உயிர் பெற்று எழுந்தான்.

இங்ஙனம் பல அற்புதங்களை செய்துவரும் நாளில், அவருடைய பிதாவாகிய சிவசிதம்பரம் பிள்ளை சுவாமிகள் முன்பாக நின்று "ஸ்வாமின்! எனது பாரியை மீனாம்பிகை பிரேதமாய் கிடக்க யான் பாராதிருக்கும் வரம் தரல் வேண்டும்" என்றும் "சுவாமிகளின் திருகரத்தாலேயே எனக்கு ஈமக்கடன்கள் முடிக்க வேண்டும்" என்றும் ப்ரார்த்திதுக்கொண்டார். இதனை கேட்ட மீனாம்பிகை "சுமங்கலியாகவே தான் சரீரத்தை விட வேண்டும் என்றும் தனக்கும் சுவாமிகளின் திருகரத்தாலேயே ஈமக்கடன்கள் செய்ய வேண்டும் " என்றும் கேட்டு கொண்டனள். ஒரு நாள் சுவாமிகள் தாய் தந்தையரை அருகில் அழைத்து "இன்னும் எட்டாவது நாள் காலையில் நமது கருமம் முடிந்துவிடும்.  நீங்கள் சிவநாமத்தை உச்சரித்துக் கொண்டு சிவத்தியானம் செய்து வாருங்கள்" என்று அருளினார். இதை கேட்ட பெற்றோர்கள் இருவரும் சுவாமிகள் திருக்குறிப்பை உணராமல் மிக்க வியாகூலத்துடன் சுவாமிகள் இன்னும் எட்டு திங்கங்களில் சமாதி அடைந்து விடுவார் என்று நினைத்து உற்றார் உறவினர்களிடம் தெரிவித்து சுவாமிகள் அருளியபடி சிவத் த்யானம் செய்து கொண்டிருந்தனர். எதிர் பார்த்த எட்டாவது தினமும் விடிந்தது. இன்று தினம் சுவாமிகள் சமாதி அடைய விரும்புவதாக அறிந்த உறவினர்கள் வந்து நிறைந்தனர். மாதா, பிதாக்கள் இருவரும் தூய சிந்தனையுடன் சுவாமிகளின் முன்னர் அமர்ந்து சிவநாமத்தை உச்சரித்துக் கொண்டு சமாதி தருணத்தை எதிர் நோக்கியிருக்கும் பொழுது, சுவாமிகள் இருக்கை விட்டு எழுந்து மாதா, பிதா இருவர் நெற்றியிலும் திருநீறிட்டு அனுக்க்ரகம் purinthaar. சிறிது நேரத்தில் இருவரும் மூர்ச்சியாடைந்து கணப்பொழுதில் சிவபதம் அடைந்தனர். கூடி இருந்த உறவினர்கள் சுவாமிகளின் திருகுறிப்பின் உண்மையை உணர்ந்து சிவசிதம்பரம் பிள்ளைக்கும், மீனாம்பிகை அம்மைக்கும் செய்ய வேண்டிய இறுதிக் கிரியைகளை முறைப்படி செய்து மயானத்துக்கு எடுத்துச் சென்று இருவருக்கும் ஒரே தானத்தில் சிதை அடுக்குத் தீ இடுவதர்க்குத் தயார் செய்தனர்.  சுவாமிகள் விதிப்படி வந்து ஸ்நானம் செய்து கொள்ளி  எடுத்துக் கொண்டு சுற்றி வந்து தலைப்பக்கத்தில் வைத்துவிட்டுத் தமது பெற்றோர் கடன் தீர்ந்தது என்று, கட்டிய வஸ்திரத்தோடு திரும்பி பாராமல் எவரும் அறியா வண்ணம் புறப்பட்டுத் தேசங்கள் தோறும் சஞ்சரிக்க தொடங்கினார்.

வைதீஸ்வரன் கோயிலுக்கு வந்தபோது ஒரு நாள் சுவாமிகளின் உறவினரான கோயில் கணக்கர் சுவாமிகளைக் கண்டு சுவாமிகளின் மகிமை அறியாது, "தம்பி! நான் பத்துத் தினங்கள் மருந்து சாப்பிட வேண்டி இருக்கிறது.  அது வரை நீ இங்கிருந்து கணக்கு எழுதி வருகிறாயா?" என்று வினவ, ஸ்வாமிகள் "சிவ கைங்கர்யம் தானே, செய்கிறேன்" என்றார்.

கணக்கு ஊழையும்  எழுத்தாணியையும் சுவாமிகள் கணக்கரிடமிருந்து பெற்றுக்கொண்டு கணக்கு மேடையில் அமர்ந்து, மணியக்காரர் முதலானோர் வந்து விவரம் சொல்வதற்கு முன்னதாகவே எழுத வேண்டியவை அனைத்தையும் எழுதி முடித்துக் கணக்கைக் கட்டி வைத்து விட்டு நிட்டையில் அமர்ந்துவிடுவார்.  மணியக்காரர் ஆகியோர் வந்து கணக்கு விவரம் சொல்லும் பொது "யாவும் எழுதி ஆயிற்று; கணக்கை பார்த்துக் கொள்ளுங்கள்" என உத்தரவாகும்.  அவர்கள் கணக்கை எடுத்து பார்க்கும் பொழுது எல்லாம் சரிவர எழுதி இருக்கும்.  ஒரு நாள் கோவில் திட்டத்தில் நான்கு படி பாலும் ஒரு படி தேனும் கணக்கு எழுதப்படாமல் இருந்ததைக் கண்டு மணியக்காரர் சுவாமிகளிடம் கேட்க, "குருக்கள் பாலையும் தேனையும் அபிஷேகம் செய்யாமல் வீட்டுக்கு கொண்டு செல்ல வைத்திருக்கிறார்.  போய் பாருங்கள்" என்றார்.  மணியக்காரர் கோவிலுக்குள் சென்று சுவாமிகள் குறித்த இடத்தில் பார்வையிட, பாலும் தேனும் தனியாக எடுத்து வைக்கப்பட்டிருந்தன.  இவ்விதமாக சுவாமிகள் எழுதி வந்த கணக்கு காரணமாக, தயிர், பால், அரிசி,  எண்ணை ஆகியனவும், உண்டியல் பணம், முடிப்பணம் ஆகியனவும் களவு செய்ய இடமில்லாடதாயிற்று.

கோயில் சிப்பந்திகளும், சுவாமிகளைக் காணும் பொது அச்சத்துடன் எழுந்து நின்று வணக்கம் செய்பவர்களாயினர்.  தான் கணக்கு எழுதி வருவது காரணமாக கோவில் சிப்பந்திகள் தம்மிடம் அச்சங் கொண்டு மரியாதைக் காட்டி வருவதை உணர்ந்து சுவாமிகள் அவ்வூரை விட்டு தென் திசை நோக்கிப் புறப்பட்டுப் பல ஊர்களிலும் சஞ்சரித்துக் கொண்டு அதி வீரராமன் பட்டினத்தை அடைந்தார்.